தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தென்காசி மாவட்டம் திபனம்பட்டி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆராதனா என்ற சிறுமி 3-ம் வகுப்பு படிக்கிறார். இந்த சிறுமி முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் என்னுடைய மனுவை ஏற்று எங்களுடைய பள்ளிக்கு நிதி ஒதுக்கியதற்காக மிகவும் நன்றி.
இதை உங்களை நேரில் சந்தித்து தெரிவிக்க எனக்கு ஆசையாக இருக்கிறது. நீங்கள் என்னிடம் இதே பள்ளியில் படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று கூறினீர்கள். நீங்கள் கூறியபடி நான் படித்து நிச்சயமாக பெரிய ஆளாக வருவேன். அப்போதும் நீங்கள் தான் தமிழகத்தின் முதல்வராக இருக்க வேண்டும் என்று எழுதியுள்ளார். மேலும் இந்த மாணவி எழுதிய கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கடந்த மாதம் 28-ஆம் தேதி சிறுமி ஆராதனா முதல்வர் ஸ்டாலினுக்கு எங்கள் பள்ளியில் இட வசதி இல்லை என்றும் புதிய வகுப்பறைகள் மற்றும் புதிய விளையாட்டு மைதானங்கள் அமைத்து தர வேண்டும் எனவும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தார். அதன் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பாக தென்காசி மாவட்டத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த போது சிறுமி ஆராதனாவை பாராட்டினார். அதோடு சிறுமியின் கோரிக்கையை ஏற்று அப்பள்ளியில் புதிய கட்டிடத்தை கட்டுவதற்காக சுமார் 35 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.