“ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ராபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. இதில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை கடந்த 2018 (டிச 14-ல்) விசாரித்து எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர்கள் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் ரஃபேல் வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை மீண்டும் உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎஸ் கவுல், கே. எம் ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இந்தத் தீர்ப்பு குறித்து ராஜ்நாத் சிங், “ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. எங்கள் அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவை என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.