ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியரை தாக்கிய திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள பாக்குவெட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் கண்ணையா என்பவர் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திமுக இலக்கிய செயலாளர் அய்யனார் என்பவர் ரேஷன் கடைக்கு வந்துள்ளார். அப்போது ரேஷன் கடையில் நிவாரண பொருட்கள் மற்றும் 2,000 ரூபாய்யும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த அய்யனார் எனது தலைமையில் பணத்தையும், நிவாரண பொருட்களையும் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் அய்யனாருக்கும் ரேஷன் கடை ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அய்யனார் கண்ணையாவை கட்டையால் தாக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கண்ணையா அளித்த புகாரின் அடிப்படையில் திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.