தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசரும், துணைத் தலைவர்களாக கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் இருக்கிறார்கள். அதன்பிறகு நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக நடிகர் விஷாலும், பொருளாளராக நடிகர் கார்த்தியும் இருக்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் 2 முறை பாண்டவர் அணி வெற்றி பெற்று பதவியை கைப்பற்றியுள்ள நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு நாசர் தலைமையில் நடிகர் சங்கம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வந்த நிலையில் 70% பணிகள் நிறைவடைந்தது.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கக கட்டிடமானது பாதையில் நிற்கும் நிலையில் இன்னும் 30 கோடி ரூபாய் தேவைப்படுவதாக கடந்த மே மாதம் நடிகர் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். இதற்காக வங்கி அல்லது கலை நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டப்படும் என்று நடிகர் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் லத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் விஷால் பேசியது தற்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அவர் கூறியதாவது, நடிகர் சங்கத்தை ஏற்கனவே நாங்கள் கட்டி முடித்திருப்போம். ஆனால் தேர்தல் காரணமாக நடிகர் சங்கம் கட்டும் பணிகளில் 3 ஆண்டு காலம் காலதாமதம் ஆகிவிட்டது. ஆனால் விரைவில் நடிகர் சங்கத்தை நாங்கள் கட்டி முடிப்போம். என்னுடைய நண்பர்களான ராஜா மற்றும் மகேஷ் ஆகியோர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது என்னுடைய நண்பர் உதயநிதியும் அமைச்சராக ஆகியுள்ளார்.
இது எனக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் இனி நடிகர் சங்கத்திற்கு வேண்டிய கோரிக்கைகள் மற்றும் உதவிகளை அவர்களிடம் உரிமையாக கேட்பேன் என்று கூறியுள்ளார். மேலும் விஷால் நடிகர் சங்கத்திற்கு வேண்டிய உதவிகளை அமைச்சர்களான ராஜா, அன்பில் மகேஷ், உதயநிதி ஆகியோரிடம் உரிமையோடு கேட்பேன் என்று கூறியது தான் தற்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.