நான் இப்படி மோசமாக ஆடியது இல்லை என்று அதிரடியாக ஆடிய ராகுல் திவேதியா தெரிவித்துள்ளார்..
ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டி நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களம் இறங்கி அதிரடியாக ஆடினர்.. இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழந்து 223 ரன்களை குவித்தது..
அதிரடியாக விளையாடிய மயங்க் அகர்வால் 50 பந்துகளில் 106 ரன்களையும், கேஎல் ராகுல் 54 பந்துகளில் 69 ரன்களும் எடுத்தனர்.. மேலும் நிக்கோலஸ் பூரன் 25 ரன்கள் எடுத்தார்.. பின்னர் 224 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் ஸ்மித் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.. இதில் சுமித் அருமையாக ஆடினார்.. ஆனால் காட்ரெல் பந்துவீச்சில் பட்லர் 4 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்..
இதனையடுத்து கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் கேப்டன், ஸ்டீவ் ஸ்மித் இருவரும் கைகோர்த்தனர்.. இருவரும் பஞ்சாப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.. தங்களுக்கும் அதிரடியாக ஆட தெரியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இவர்களது அடி இருந்தது.. பவர் பிளேயில் அதிரடியாக ஆடி 60க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தனர்.. அதன்பின் சாம்சன் வழக்கம்போல சிக்ஸர்களை பறக்கவிட்டார்.. சிறப்பாக ஆடிய கேப்டன் ஸ்மித் 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்..
இதனையடுத்து 17 வது ஓவரில் சாம்சன் 42 பந்துகளில் 85 ரன்களில் ஆட்டமிழந்தார்.. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு நிறைந்தது.. கடைசியில் ராகுல் திவேதியா காட்ரெல் வீசிய 18-வது ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு பஞ்சாப் வீரர்களை பதறவிட்டார்.. தொடக்கத்தில் ஆமை வேகத்தில் ஆடிக்கொண்டு இருந்த அவர் பின்னர் சூறாவளியாக மாறியது அந்த அணியினருக்கு வெற்றியை பரிசாக கொடுத்தது.. திவேதியா 31 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.. இதனால் ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 226 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக சேசிங் செய்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்தநிலையில் போட்டி முடிந்தவுடன் தனது ஆட்டம் குறித்து பேசிய இளம் வீரர் ராகுல் திவேதியா, நான் முதல் 20 பந்துகளை சந்தித்து மிகவும் மோசமாக ஆடினேன்.. இதுபோல எப்பொழுதுமே நான் விளையாடியதே கிடையாது.. பயிற்சியின்போது நான் நன்றாகவே ஆடினேன்.. அதன் காரணமாகவே அணி வீரர்கள் என்மீது இறுதிவரை நம்பிக்கை வைத்திருந்தனர்.. அதே போல நானும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தேன்.. நான் தொடக்கத்தில் சரியாக ஆடாத போது எங்களது அணி வீரர்கள் இருக்கும் இடத்தை நான் பார்த்தேன்..
அவர்கள் ஒவ்வொருவருமே தான் அதிரடியாக விளையாடுவதற்காக காத்திருந்தார்கள்.. இருப்பினும் அவர்கள் என்னால் சில பந்துகளை அடிக்க முடியும் என்று நினைத்திருப்பார்கள்.. கடைசியில் நான் ஒரு சிக்சர் அடித்தவுடன் எனக்கு ஒரு புது நம்பிக்கை பிறந்தது.. அதன்பின்னர் தான் காட்ரெல் வீசிய அந்த ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்க விட்டது எனக்கு அபாரமாக இருந்தது. அணியின் பயிற்சியாளர் என்னை லெக் ஸ்பின்னர்களை டார்கெட் செய்து சிக்சர்கள் அடிக்கும்படி இறக்கி விட்டார்.. ஆனால் நடந்தது அப்படியே தலைகீழாக மாறி விட்டது.. நான் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று.. நான் லெக் ஸ்பின்னரை அடிக்காமல் வேகப்பந்து வீச்சாளர் பந்துவீச்சை அடித்தேன் என்று அவர் கூறினார்..