ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வைகை நகர் பகுதியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியரான மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மனைவியை அழைத்து கொண்டு மாரியப்பன் வெளியே சென்றுள்ளார். இதனையறிந்த மர்ம நபர்கள் சிலர் மாரியப்பனின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதனையடுத்து பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பியோடியுள்ளனர்.
இதனையறிந்து அதிர்ச்சியடைந்த மாரியப்பன் உடனடியாக கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் ராமநாதபுரம் அத்தியூத்து பகுதியை சேர்ந்த பிரபுராஜா என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 7 பவுன் நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.