மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளநிலை பொறியாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையர் நாயக்கம்பட்டி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்கொடி என்ற மனைவி உள்ளார். இதில் சங்கர் ஓசூர் ஹவுசிங் போர்டு அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பையன் நாயக்கம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து இவர்கள் திருவண்ணாமலை சாலையில் இடது புறம் ஓரமாக சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மலர்கொடியை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த கோட்டபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த சங்கரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.