ஃபிட் பிட்டை கூகுள் வாங்கியுள்ள போதும் பயனாளர் குறித்த தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படாது என்று ஃபிட் பிட் உறுதியளித்துள்ளது.
கூகுள் நிறுவனம் பல்வேறு துறைகளில் தனது வெற்றித் தடத்தைப் பதித்துள்ளபோதும், ஸ்மார்ட் வாட்ச் துறையில் கூகுளின் பாட்சா நீண்ட காலமாகவே பலிக்காமல்தான் இருந்தது. போட்டியில்லாத காரணத்தால் ஆப்பிள், சாம்சங், ஹுவாவே ஸ்மாட்ர்வாட்ச்-களின் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.இந்நிலையில், ஃபிட் பிட் நிறுவனத்தைக் கூகுள் 2.1 பில்லியின் டாலருக்கு வாங்குவதாகச் சமீபத்தில் அறிவித்துள்ளது. இது ஆப்பிள், சியோமி ஸ்மார்ட்வாட்சுகளுக்கு கடும் போட்டியைத் தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும், கூகுளின் இந்த அறிவிப்பால் அவர்களைவிட அதிகமாக கலக்கமடைந்திருப்பது என்னமோ ஃபிட் பிட் பயனாளர்கள்தான். காரணம், பொதுவாகக் கூகுள் தனது பயனாளர்களின் தகவல்களைக் கொண்டு அவர்களுக்கு விளம்பரங்களைக் காட்டும். இதேபோல ஃபிட் பிட் பயனாளர்களின் தகவலும் விளம்பரத்துக்கு பயன்படுத்தப்படுமோ என்று குழப்பம் நிலவியது. ஃபிட் பிட் பயனாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் கிளம்பியிருந்தது.
இந்நிலையில், ஃபிட் பிட் தரப்பில் பயனாளர்கள் குறித்து நாங்கள் வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் தனிப்பட்ட ஒன்று என்றும் கூகுள் நிறுவனத்துடன் இந்தத் தகவல்கள் கண்டிப்பாகப் பகிரப்படமாட்டாது என்றும் உறுதியளித்துள்ளது.