ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிக குற்றத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஆனையூர் பகுதியில் அழகுராஜா(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த சக்திமுருகன் என்பவருடன் டிராக்டரில் சென்றுள்ளார். அப்போது மேலக்கன்னிசேரியை சேர்ந்த நாகேந்திரன்(26), முனியசாமி(21), வழிவிட்டான்(42), மணிகண்டன்(21) ஆகிய 4 பேர் இவர்களை வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அழகுராஜா காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அவர்கள் 4 பேரையும் பேரையூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவிற்கு சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் பரிந்துரை செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும் இதற்கான உத்தரவை வழங்கிய நிலையில் நாகேந்திரன், முனியசாமி, மணிகண்டன், வழிவிட்டான் ஆகிய 4 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.