தமிழகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருக்கிறார். இவர் கடந்த 2011-15 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அன்னராஜ், தேவசகாயம், சகாயராஜன் மற்றும் பிரபு ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தொடர்ந்து டுவிட்டரில் விமர்சனம் செய்து வந்துள்ளார். அதாவது மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து தொடர்ந்து டுவிட்டரில் விமர்சனம் செய்து வந்துள்ளார். இதன் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் தன் மீது அவதூறு பரப்பும் நிர்மல் குமாருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது அவதூறு நோட்டீஸ் அனுப்பியும் தொடர்ந்து நிர்மல் குமார் அவதூறாக பேசி வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். இதை கேட்ட நீதிபதிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி அவதூறு கருத்துக்களை பரப்புவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுவுக்கு நிர்மல் குமார் உரிய முறையில் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.