திருத்தணி அருகே தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடற்ற ஏழைகளுக்கு பயன்பெறும் வகையில் 100 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி ஒன்றிய முருக்கம்பட்டு கிராமத்தில் மத்திய அரசு அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக 1040 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட சென்ற 2010 வருடம் அரசாணை வெளியிட்டது. இதற்கான கட்டிட பணிகள் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் புறம்போக்கு நிலங்களில் வாழும் குடியிருப்பு வாசிகள், பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை மக்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு ஏதுவாக இக்கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு 20 மாதங்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள பணிகள் இன்னும் நான்கு மாதத்திற்குள் கட்டி பயனாளிகளுக்கு வழங்கப்பட இருக்கின்றது.
இது குறித்து மாவட்ட உதவி நிர்வாக பொறியாளர் கூறியுள்ளதாவது, வீடுகள் ஒதுக்கீடு கூறும் நபரின் ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். எந்த பகுதியிலும் சொந்தமாக கான்கிரீட் தளம் போட்ட வீடுகள் இருக்கக் கூடாது. இத்திட்டத்தின் கீழ் வீடுகள் தேவைப்படும் பயனாளிகள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி புத்தகத்தின் நகல் உள்ளிட்டவற்றை இணைத்து திருவள்ளுவர் நிர்வாகப் பொறியாளர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் மனு அளிக்க வேண்டும். இந்த மனுக்கள் ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டு தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்து கொடுத்த பின்பு ஒதுக்கப்படும் என கூறினார்.