கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் கரையை கடந்த நிவர் புயல் தமிழகத்தில் பெருமளவு சேதத்தை ஏற்படுத்த வில்லை என்றாலும், அதிக அளவு மழையை கொடுத்தது. சென்னைக்கு ஓராண்டுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது என்றும் சொல்லும் அளவிற்கு நீர் ஆதாரத்தை கொடுத்தது. நிவர் புயலால் பெய்த கனமழை காரணமாக சென்னையில் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை சில முடிவுகளை எடுத்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிலைமை சீராகும் வரை ஆன்லைன் வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.