எனது பார்வையில் ரோகித் தான் உலகிலேயே தலை சிறந்த ஒரு நாள் போட்டி ஆட்டக்காரர் என்று ஹிட்மேன் ரோகித் சர்மாவை கேப்டன் விராட் கோலி புகழ்ந்து கூறியுள்ளார்
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி தனது 4-வது சதத்தை பதிவு செய்தார். போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ரோஹித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அத்துடன் அதிக ரன்கள் அடித்தவர்களின் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். இதனால் இந்திய அணி வலிமையாக உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ரோஹித் சர்மாவின் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், கடந்த சில ஆண்டுகளாக ரோகித் சர்மாவின் ஆட்டத்தை நான் கவனித்து வருகிறேன். எனது பார்வையில் ரோகித் தான் உலகிலேயே தலை சிறந்த ஒரு நாள் போட்டி ஆட்டக்காரர். அவர் நன்றாக ஆடும் பட்சத்தில் அணியின் ஸ்கோர் நிச்சயமாக உயரும். தற்போது அவரது ஆட்டம் எனக்கு மிகவும் திருப்தியளிக்கிறது.
அவரின் இந்த சிறப்பான ஆட்டம் மற்ற வீரர்களுக்கு ஊக்கமளிக்கிறது. மேலும் கடந்த போட்டியில் வங்கதேச அணி சிறப்பாக விளையாடியது. இந்த போட்டியில் அவர்களின் போராட்டகுணம் மிகவும் மேலோங்கி இருந்தது. இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.