பல நூற்றாண்டுகளாய் அடிமைப்பட்டுக் கிடந்த தொழிலாளர் வர்க்கம் மறுக்கப்படும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் இருந்தது என்பதே உண்மை. பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் 20 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்டனர். முதன்முதலாக 1806 ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் 10 மணி நேர வேலை கேட்ட தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது.
உறங்குவதாய் எண்ணப்பட்ட தொழிலாளர்களின் உரிமை குரல் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலித்தது. இம்முறை தொழிலாளர்களின் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலித்தது. அதனால் அரசுப் பணியாளர்களுக்கு மட்டும் 10 மணி நேர வேலை என அமெரிக்காவில் சட்டம் இயற்றப்பட்டது. இது தோல்வியல்ல தொடங்கப் போகும் புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்று நினைத்த தொழிலாளர்களின் போராட்டம் ஓயவில்லை. 1856 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் தொழிலாளர்களின் புரட்சி புது வேகம் கண்டது.
முதன்முதலாக அமெரிக்காவில் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை மீட்பதற்காக ஒன்றிணைந்தனர். 1886ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி ஒன்றுபட்ட வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த போராட்டத்தில் பெரும்பாலான அமெரிக்க தொழில் நகரங்களில் 8 மணி நேர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தொழிலாளர்கள் வீதிக்கு வந்து போராடினர்.
சிகாகோவில் மட்டும் 70 ஆயிரம் பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்ற மார்க்சின் அழைப்பின் அர்த்தம் உணர்ந்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற பெயரில் முதல் தொழிலாளர் இயக்கம் உருவாக்கப்பட்டது. தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால் அமெரிக்கா அரசு 1890 ஆம் ஆண்டில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றது.
இன்றும் பல நாடுகளில் தொழிலாளர்கள் சுரண்டப்படும் நிலை இருந்தாலும் அடிப்படை உரிமைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதற்காக மே 1 ஆமாம் தேதி போராட்டம் நடைபெற்றால் அந்த தினம் உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.. இந்தியாவில் தமிழகத்தில் தான் முதன் முதலாக தொழிலாளர் தினம் 1923 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.