வாழ்கையில் பல்வேறு தடைகளை தாண்டி முன்னேறிய ஹிப் ஹாப் ஆதி தமிழ் திரையுலகில் தனக்கென தனியிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா என்று அழைக்கப்படும் ஆதி 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் பிறந்தார். இவரது தந்தை ராமச்சந்திரன் வெங்கடபதி பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்துள்ளார். இவர் தனது பள்ளிப் படிப்பை கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சவர வித்யா பவன் பள்ளியில் படித்து முடித்தார். அதன்பிறகு ஆதி எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிப்பை பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் முடித்தார். இவர் சிறுவனாக இருக்கும் போது உறவினர் ஒருவர் மைக்கேல் ஜாக்சனின் “ஜாம்” என்ற வீடியோவை ஆதியிடம் காண்பித்துள்ளார்.
அப்போதுதான் ஆதிக்கு ராப் மியூசிக் மீதுள்ள ஆர்வமானது வெளிப்பட்டுள்ளது. அப்போதிலிருந்து இவர் ராப் பாடல்களை தமிழில் உருவாக்கி அதனை வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவருடைய முதல் ஆல்பம் “எழுவோம் வா” என்பது தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்காக உருவாக்கப்பட்டதாகும். இதனையடுத்து தமிழ் திரையுலகில் இவருடைய “கிளப்புல மப்புல” என்ற ஆல்பம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆதி தனது நண்பரான ஜீவா என்பவருடன் “ஹிப் ஹாப் தமிழன்” என்ற ஆல்பத்தை 2012 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் ஆல்பங்களை வெளியிட்டு வந்த ஹிப் ஹாப் ஆதிக்கு தமிழ் சினிமாவில் “ஆம்பள” என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தின் மூலம் தனது முழு திறமையையும் காண்பித்து தனக்கென தனி இடத்தை திரையுலகில் பிடித்துள்ளார். இதனையடுத்து 2017 ஆம் ஆண்டு வெளிவந்த “மீசைய முறுக்கு” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு ஆதி 2017 ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி லக்ஷயா தேவரெட்டி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறாக பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி முன்னேறி தனக்கென திரையுலகில் ஹிப் ஹாப் ஆதி தனிப்பட்ட இடத்தை பிடித்துள்ளார்.