ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 12 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதன் முடிவுகள் டிசம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சார பொதுக்கூட்டம் ஜஸ்வானில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது “70 ஆண்டுகளாக முஸ்லிம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் முத்தலாக் (முஸ்லீம் விவாகரத்து சட்டம்) நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருந்தனர். ஆனால் வாக்கு வங்கியை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் காங்கிரஸ் இதுவரை அதனை கண்டு கொள்ளவில்லை. பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்துவோம். மேலும் அரசியலுக்காக தேசிய நலன்களைப் காங்கிரஸ் புறக்கணிக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து பிரக்பூர் தொகுதியில் ஒரு பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றிய போது “2019 இல் இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு அவர் சமூக தீமையை ஒழித்தார். மேலும் 2017 ஆம் ஆண்டு முத்தலாக் சட்டத்திற்குப் புறம்பானது என்று உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து முத்தலாக் யாரேனும் பயன்படுத்தினால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற தீர்மானம் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனைதொடர்ந்து மக்கள் பாஜக அரசுக்கு வாக்களிக்க வேண்டும். யுசிசியை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 11 வாக்குறுதிகளில் யுசிசியை அமல்படுத்துவதும் அடங்கும். காங்கிரஸ் கட்சி ராமர் கோயில் கட்டவில்லை. பாபர் கோயிலை இடித்ததில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ அதன் அடிக்கல்லை நாட்டினார். மேலும் அயோத்தியில் ஒரு அற்புதமான ராமர் கோவில் ஜனவரி 2024 க்குள் தயாராகிவிடும். நேரு அரசியலமைப்பில் 370 வது பிரிவை இணைத்ததில் ஒரு பெரிய தவறு செய்துள்ளார். அந்த தவறுதான் 70 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரை இந்தியாவிலிருந்து அந்நியப்படுத்திய வைத்திருந்தது. ஆனால் மோடி அரசு தான் 370வது சட்டப்பிரிவை அரசியலமைப்பில் இருந்து நீக்கி ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் மின்னும் தலை கிரீடமாக மாற்றி அமைத்தது. பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு, பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதன் மூலம் இந்தியா உலகின் வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏஐசிசி செயலாளர் ரகுபீர் சிங் பாலி கூறியதாவது “யுசிசியை அமல்படுத்துவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால் இது எந்த வகையில் சாத்தியம் என்று தெரியவில்லை. ஹிமாச்சல பிரதேசத்தில் 95% மக்கள் இந்துக்கள். நமது மாநிலத்தில் UCC பொருத்தமற்றதாக இருக்கும். நாம் மதச்சார்பற்ற நம்பிக்கைகள் கொண்ட அமைதியான மாநிலமாக இருக்கின்றோம். எனவே இமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவின் துருவமுனைப்பு வேலை செய்யாது” என்று அவர் கூறியுள்ளார்.