பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா?’ என்று உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில் சுபஸ்ரீ (23) தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து சுபஸ்ரீ வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகின்றது. கடந்த 13 ஆம் தேதி தமிழக அரசு, அதிகாரிகள் மற்றும் காவல்துறை மீது கேள்விகளையும் விமர்சனங்களையும் நீதிபதிகள் முன்வைத்தனர். இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் வேண்டும்? என்றும் கேள்வியெழுப்பியிருந்தது. பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் அரசு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா?’ என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.