சீனாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் இருக்கும் வூகான் நகரில்தான் கொரோனா தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்டது. வூகான் நகரில் தொற்று வேகமாக பரவியதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் வாழ்க்கை முடக்கப்பட்டது. கொரோனா தொற்றினால் ஏராளமானோர் அந்நகரில் பலியானார்கள். எனினும் சீனா அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் சீனாவில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 84,029 என்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 4673 என்றும் அதிகாரப்பூர்வ கணக்குகள் வெளியிட்டது.
சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று சீனாவில் ஏற்பட்ட இழப்பை காட்டிலும் பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. கொரோனாபரவியதற்கு முக்கிய காரணம் சீனா தான் என அமெரிக்கா ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றது. அதோடு சீனாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறித்த உண்மைத் தகவலை அவர்கள் மூடி மறைப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தி வந்தது.
இந்நிலையில் சீனாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 40 ஆயிரம் என தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைகழக தரவுத்தளம் பதிவு செய்துள்ளது. இதுநாள் வரை ரகசியமாக பாதுகாக்கப்பட்ட கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விவரங்கள் தற்போது வெளியில் கசிந்து உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சீனாவின் 230 நகரங்களில் சுமார் 100 தன்னார்வ பத்திரிகையாளர்கள் மூலம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்தத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.