கொரோனா அறிகுறி இருந்தால் தங்களுக்கு வீடுகளிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளுமாறு மதுரை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மாநில அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. தமிழகத்தின் பல்வேறு முக்கிய மாவட்டங்களில் அதனுடைய பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் இதனுடைய பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. சென்னையில் பாதிப்பு மிகப்பெரிய அளவில் பெருக நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு அடுத்தபடியாக தென் மாவட்ட பகுதிகளில் அதிக பாதிப்பை கொண்ட மாவட்டமாக மதுரை விளங்குவதால், ஆரம்பத்திலேயே பாதிப்பை குறைப்பதற்கு மாநகராட்சி சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மொத்த பாதிப்பு 2000த்தை கடந்த நிலையில், தற்போது பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், படுக்கை வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும், பாதிக்கப்படும் நபர்களை அவர்களது வீட்டில் வைத்தே சிகிச்சை அளிப்பதற்கான முயற்சியை தற்போது மாநகராட்சி மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
இதன்படி, அதீத உடல் வலி, காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவர்கள் தங்களையே தங்களது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பின், மாநகராட்சியை 8428425000 இந்த எண் மூலம் தொடர்புகொண்டு தகுந்த ஆலோசனைகளைப் பெற்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போதாத பட்சத்தில் மதுரை மாவட்டங்களில் கிட்டத்தட்ட 95 பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதாகவும், அந்த இடங்களுக்குச் சென்று பயன் அடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.