தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதனால் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியில் அதிகபட்சமாக 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியின் மைலாடி மற்றும் புதுக்கோட்டையின் தலா பகுதிகளில் தலா 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதையில் தெங்கன்குழி பகுதியில் தாழ்வான இடத்தில் ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் சரக்கு ரயில் மற்றும் ரயில்வே பணிக்காக தொழிலாளர்கள் செல்லும் ரயிலும் வழியிலேயே நிறுத்தப்பட்டன. தண்டவாளத்தை மூடியுள்ள மண்ணை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஊரடங்கு காரணமாக திருவனந்தபுரம் நாகர்கோவில் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து இல்லாததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கன்னியாகுமரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.