தொடர் கனமழையால் பயிர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பயிரிடப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளத்தால் தற்போது அழுக தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை பணியை தொடங்கியுள்ளனர். ஆட்கள் வைத்து கூடுதல் கூலி கொடுத்து இரண்டு அடி ஆழ தண்ணீரில் நின்று அறுவடை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. மேலும் அறுவடை இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு 3,250 ரூபாய் வாடகை கொடுத்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தொடர் கனமழையால் எந்திர வாடகை உயர்வு, நெல் விளைச்சல் பாதிப்பு, ஆட்கள் கூலி உயர்வு போன்ற காரணங்களால் கூடுதல் செலவு ஆகின்றது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு ஏக்கருக்கு 30 மூட்டை நெல் கிடைக்கும் இடத்தில் பயிர்கள் சேதம் அடைந்திருப்பதால் தற்சமயம் 10 முதல் 15 மூட்டைகளை கிடைக்க வாய்ப்புள்ளதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும், நூறு சதவீத காப்பீடு தொகையும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.