தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டிசம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை இயக்கம் ஒரு முக்கிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கனமழையை முன்னிட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் பிறகு அணைகள் மற்றும் நீர் தேக்கங்களில் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து போன்றவற்றை தொடர்ந்து கண்காணிப்பதோடு, கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக திரும்பி வரவேண்டும். அதோடு மீனவர்கள் கடலுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். இந்த பணிகளை செய்வதற்காக அந்தந்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழுக்கள் தயார் நிலையில் இருக்கின்றார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.