ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் விக்டோரியா மாகாணத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் புறநகர் பகுதிகளில் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
மேலும் அப்பகுதியில் 500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு சுமார் 120 சாலைகள் முற்றிலுமாக நீரினால் சூழப்பட்டுள்ளது. இதனால் மீட்பு குழுவினரை ஆஸ்திரேலிய ராணுவம் விக்டோரியா மாகாணத்தில் களமிறக்கியுள்ளது. அவர்கள் மிதவை படகுகள் மூலம் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கின்றனர். சில பகுதிகளில் வெள்ள நீர் வருவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்புறம் மணல் மூட்டைகளை குவித்து வருகின்றனர்.
இதற்கு ராணுவமும் உதவி செய்து வருகின்றது. இந்த வெள்ள பாதிப்பினால் விக்டோரியா மாகாணத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் கொரோனா தனிமைப்படுத்துதல் மையம் ஒன்றில் சுமார் 1000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலும் கனமழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.