சென்னையில் இன்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அமமுக கட்சி என்பது சுதந்திரமாக இயங்கக்கூடிய ஒரு கட்சி. நாங்கள் யாருடனாவது கூட்டணி வைப்போம் தான் என்று கூறி இருந்தோமே தவிர அதிமுகவுடன் கூட்டணி வைப்போம் என்று கூறவில்லை. அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும். இந்த மெகா கூட்டணி என்று சொல்பவர்கள் அடுத்தவர்களை தரம் தாழ்த்தி பேசுபவர்கள்.
திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் கூறினேனே தவிர கால் சதவீதம் அரை சதவீதம் கூட எடப்பாடி பழனிச்சாமியின் பக்கம் சேர்வேன் என்று நான் எங்கேயும் கூறவில்லை. என்னிடம் அதிமுகவுடன் கூட்டணி வைக்கப் போகிறீர்களா என்ற கேள்வி தான் அடிக்கடி எழுகிறது. இன்றைக்கு அதிமுக என்பது ஒரு செயல்படாத கட்சியாகவே இருக்கிறது. ஒருவேளை திடீரென்று இடைத்தேர்தல் வந்தால் கூட அதிமுக சார்பில் நிற்கவைக்கப்படும் வேட்பாளருக்கு யார் சின்னத்தை ஒதுக்குவார்கள் என்பது கூட தெரியவில்லை.
இந்த வார்த்தையை நான் சொல்ல வேண்டாம் என்று தான் நினைக்கிறேன். ஆனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இன்று அதிமுக என்பது ஒரு தலை இல்லாத முண்டமாக தான் இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். தலையில்லாத முண்டமாக இருப்பதால்தான் அடிக்கடி மெகா கூட்டணி என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடுபவர்களுக்கு படிவத்தை கூட அதிமுகவால் கொடுக்க முடியவில்லை.
ஒரு இடைத்தேர்தல் அல்லது தேர்தல் வந்தால் ஏ அல்லது பி படிவத்தை யார் கொடுக்க வேண்டும் என்பதே அக்கட்சியில் தெரியவில்லை. இதனால்தான் அதிமுக செயல்படாத நிலையில் இருக்கிறது என்று கூறுகிறேன். மேலும் திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள்தான் ஒன்றிணைய வேண்டும் என்று கூறியுள்ளார்.