மாணவர்களின் வீடு தேடி சென்று அவர்களை மரத்தடியில் அமரவைத்து தலைமை ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்கின்றார்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செஞ்சேரி புத்தூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு அறிவுத்திறனை வளர்க்கும் பொருட்டு கடந்த 22ஆம் தேதி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் வீட்டிற்கு தேடி சென்று அவர்களைத் திரட்டி ஒரு மரத்தடியில் அமரவைத்து செஞ்சேரி புத்தூர் ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் மகர ஜோதி கணேசன் என்பவர் பாடம் நடத்துகிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, மாணவர்களுக்கு அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டாலும், அதனை எப்படி படிக்க வேண்டும் என்பது மாணவர்களுக்கு தெரியவில்லை என அவர் கூறியுள்ளார். எனவே பொது இடத்தில் சமூக இடைவெளி விட்டு மாணவர்களை அமரவைத்து, முக கவசம் அணிந்து தான் பாடம் சொல்லி கொடுப்பதாக தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு கல்வி சேனல் மூலம் ஒளிபரப்பப்படும் அந்தந்த பாடங்களுக்கான வகுப்புகள் குறித்து தெரியப்படுத்தியுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.