ரூ 1000 நிவாரணம் கொடுத்தால் அனைத்தும் முடிந்துவிட்டது என்று நினைக்காமல் 5000 நிவாரணம் வழங்க முன்வரவேண்டும் என்று முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கொரோனாவின் பரவல் கூடிக்கொண்டே செல்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 50 நாளை கடந்த நிலையிலும் கொரோனாவின் பாதிப்பு குறைந்த பாடில்லை. மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர். அரசு பல்வேறு வகைகளில் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது.
தமிழக அரசு வழங்கியுள்ள ஆயிரம் ரூபாய் போதாது என்று மக்கள் ஒருபுறம் கூக்குரல் எழுப்பினாலும், கொரோனவை கட்டுப்படுத்துவதற்கு வேறு வழி இல்லை என்று அரசின் நிவாரணத்தை ஏற்றுக்கொண்டு ஊரடங்கை வீட்டிற்குள் இருந்து மக்கள் முழுமையாக அமுல் படுத்தி வருகின்றனர். இதனிடையே தற்போது ஊரடங்கில் பல தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் எதோ கிடைக்கும் வேலைக்கு செல்லலாம் என்று நினைத்தால் கூட கொரோனாவின் தாக்கம் மக்களை அச்சம் கொள்ள வைக்கின்றது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது இருந்ததை விட தற்போது பல மடங்கு வீரியமாக கொரோனா எங்கும் பரவி உள்ளதால் மக்கள் அதிக அச்சமடைந்துள்ளனர். இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு அரசின் உத்தரவுகளை கடைபிடிக்காமல் நடந்த மக்களின் அலட்சியமே காரணம் என்று மக்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார். இது பல்வேறு வகைகளில் விமர்சனத்துக்கு உள்ளானது. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் கூட இது குறித்து கண்டனம் தெரிவித்தார்.
கோயம்பேடு வணிகர்கள் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பழிபோடுவது முதல்வர் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்த முக.ஸ்டாலின், 1000 நிவாரணம் கொடுத்தால் அனைத்தும் முடிந்துவிட்டது என்று நினைக்காமல் 5000 நிவாரணம் வழங்க முன்வரவேண்டும். அதிமுக அரசின் நிர்வாக அலட்சியமே நோய்களுக்கு அடிப்படைக் காரணமாகும் தமிழக மக்களை பேதப்படுத்தி தேவையற்ற பீதியை உருவாக்க முதல்வர் கைவிட வேண்டும் என்றும் தமிழகஅரசை முக.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.