தமிழக முழுவதும் இன்று சரஸ்வதி பூஜை பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த சரஸ்வதி பூஜை பண்டிகையை நாம் ஆயுத பூஜை என்றும் கூறலாம். இந்த சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஒர்க் ஷாப் வைத்திருப்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தை நன்றாக தூய்மை செய்து தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வழிபடுவார்கள். அதன் பிறகு ஒரு வாழை இலையில் அவல்பொரி, பழங்கள், சர்க்கரை மற்றும் இனிப்புகள் போன்றவற்றையும் பிரசாதமாக படைத்து வழிபடுவார்கள். மாணவர்கள் தங்களுடைய புத்தகங்களுக்கு சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள்.
அதுமட்டுமின்றி தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்திற்கும் முன்பாக வாழை மரங்களை நட்டும், மாலை அணிவித்தும் வழிபடுவார்கள். அதோடு வாகனங்களுக்கும் சிலர் மாலை அணிவித்து பூஜிப்பார்கள். இப்படி ஒவ்வொருவரும் சரஸ்வதி பூஜையை சிறப்பாக கொண்டாடும் நிலையில் தமிழக அரசு ஆவின் பால் பாக்கெட்டுகளில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக பாக்கெட் பிரிண்ட் செய்து வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி தீபாவளி பண்டிகையின் போது ஆவினில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு இனிப்புகளின் பெயரும் பால் பாக்கெட்டில் இடம்பெற்றுள்ளது. மேலும் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் இதற்கு வரவேற்பு கொடுத்தாலும், இதுதான் திராவிட மாடலா என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர்.