உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. கொண்டாடினாலும் கொண்டாடா விட்டாலும் தந்தை தந்தை தான். தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. இந்த நாளில் எத்தனை பிள்ளைகள் தங்களை வளர்த்தெடுத்த தந்தை செய்த தியாகங்களை எண்ணிப் பார்க்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் தான் ஒவ்வொரு தந்தையும் தங்கள் மக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நிறைவேறாத தங்களுடைய வாழ்நாள் கனவுகளை எல்லாம் தங்கள் பிள்ளைகளின் வழியெ நிகழ்த்தி பார்க்கும் உயர்ந்த உள்ளம் தந்தையை தவிர யாருக்கு வரும். பெற்ற தாய் பத்து மாதம் சுமந்தார்கள் என்றால் ஒரு தந்தை தன்னுடைய பிள்ளைகளை ஆயுள் உள்ளவரை சுமந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு சில தந்தைகளை தவிர பல தந்தைகள் தங்களுடைய பிள்ளைகளுக்காகவே வாழ்ந்துவருகின்றனர். அதிலும் குறிப்பாக தங்கள் பிள்ளைகள் ஆசைப்பட்டதை அனைத்தையும் வாங்கி தர வேண்டும் என்பதற்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கும் தந்தையர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்ட தந்தையர்களை இந்த தினத்தில் போற்றி வணங்கிடுவோம்.