இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்கள் மீதான ராக்கெட் தாக்குதலுக்கு மிகப்பெரிய தொகையை ஹமாஸ் கொடுக்கும் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் பல வருடங்களாகவே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. காசா முனை, பாலஸ்தீனத்தினுடைய தன்னாட்சி பெற்ற பகுதியாக இருக்கிறது. ஹமாஸ் அமைப்பு, இப்பகுதியை ஆண்டு வருகிறது. இந்த அமைப்பினர் ராக்கெட், ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல் நாட்டின் மீது நடத்துவார்கள்.
இதற்கு தகுந்த பதிலடியை இஸ்ரேல் ராணுவமும் கொடுத்து வருகிறது. இதனிடையே கடந்த திங்கட்கிழமை அன்று, இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் பாலஸ்தீனர்களுக்கு இடையில் இஸ்ரேல் ஜெருசலேமில் இருக்கும் அல்-அக்ஷா என்ற மத வழிபாட்டு தளத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் காசா முனையிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேலிய மக்கள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்பு படையும் தாக்குதல் நடத்தியுள்ளது. இவ்வாறு இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் காசா முனையில் 65 நபர்கள் மற்றும் இஸ்ரேலில் ஐந்து நபர்களும் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்கள் மீதான தாக்குதலுக்கு ஹமாஸ் அதிக தொகை கொடுக்கும் என்றும் எங்களின் மொத்த பலத்தையும் ஹமாஸ் மீது காட்டுவோம் என்றும் கூறியுள்ளார்.