இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் திரைப்படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடல் பாடி சினிமாவில் அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். பிறகு தனது மாமாவான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சில பிராஜக்ட் களில் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா உள்ளிட்டவர்களுடன் வேலை செய்ததோடு, உன்னாலே உன்னாலே, அந்நியன் போன்ற திரைப்படங்களில் தலா ஒரு பாடல் பாடியுள்ளார். பின்னர் 2006 ஆம் ஆண்டு வசந்தபாலனின் இயக்கத்தில் வெளிவந்த வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் இசையமைப்பில் வெளிவந்த வெயில் திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு மதராசப்பட்டினம் படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்த பூக்கள் பூக்கும் தருணம் என்ற பாடல் ரசிகர்கள் அனைவரையும் கட்டிப் போட்டது. இதனை தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்படும் படங்களுக்கும் இசையமைக்க தொடங்கினார். இவரது திரைப்படங்களில் இடம்பெறும் மெலடி பாடல்கள் சிறப்பு கவனம் பெறும். எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத அளவிற்கு அப்பாடல்கள் அமைந்திருக்கும்.
இசையமைப்பாளராக இருந்து வந்த ஜி வி.பிரகாஷ் 2015ஆம் ஆண்டு ஹாரர் காமெடி திரைப்படமான டார்லிங்கில் கதாநாயகனாக அறிமுகமானார். ஹாரரும் காமெடியும் ஒன்றாக கலந்து உருவாகியிருந்த அத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற இதனை தொடர்ந்து, ஜிவி பிரகாஷுக்கு படவாய்ப்புகள் வரத்தொடங்கியது. இயக்குனர் பாலாவின் நாச்சியார் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சிவப்பு மஞ்சள் பச்சை, 100% காதல் என இவர் நடித்த படங்கள் வெளிவந்தன.தனுஷின் அசுரன் படம் சூர்யா நடித்து வெளிவர இருக்கும் சூரரைப்போற்று திரைப்படத்திலும் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். சினிமா துறையில் வளர்ந்து வரும் இவர் சமூகப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து சேவை, இசை, நடிப்பு என தன்னை பிஸியாக வைத்துள்ளார். வளர்ந்து வரும் கதாநாயகனான ஜிவி பிரகாஷ் நாளை தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.