தமிழகத்தில் குட்கா முறைகேடு தொடர்பான விவகாரம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக பேசப்பட்டது. இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என ஆறு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர், பி.வி ரமணா ஆகியோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு அரசிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகளை தவிர மீதம் ஏழு பேர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் குட்கா விவகாரம் தொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை வந்தபோது, கூடுதல் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு மேலும் அவகாசம் வேண்டும் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு வழக்கு ஜனவரி 10ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்களை திருத்தம் செய்து, ஆவணங்களை முறையாக இணைத்து தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அதே சமயம் இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த வழக்குக்கு தேவையில்லாத சொத்துக்களும் முடக்கப்பட்டிருப்பதால், அவற்றை விடுவிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டபவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதி, கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதால், முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க முடியாது என்று கூறி வழக்கு விசாரணையை ஜனவரி 10 ஆம் தேதி தள்ளி வைத்திருக்கிறார்.