வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையில் ஹாலிவுட் நடிகையின் கார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட்டின் பிரபல நடிகையான டெனிஸ் ரிச்சர்ட்ஸ், ஸ்டார்ஷிப் ட்ரூப்பர்ஸ், வைல்ட் திங்க்ஸ் உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், அவரும் அவரின் கணவர் ஆரோன் பிலிப்ஸ்-ம் லாஸ் ஏஞ்சல் நகரத்தில் இருக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தங்களின் வாகனத்தை நிறுத்துவதற்காக இடம் தேடியிருக்கிறார்கள்.
அப்போது அவர்களின் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த நபர் “வழி விடுங்கள்” என்று கூச்சல் போட்டிருக்கிறார். உடனே, ஆரோன் பிலிப்ஸ், வாகனத்தை ஒரு பக்கமாக திருப்பி விட்டு அவருக்கு வழி விட்டிருக்கிறார். ஆனாலும் அந்த நபர் திட்டிக் கொண்டே, தன் துப்பாக்கியை எடுத்து திடீரென்று அவர்களின் வாகனத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பினார்.
இதில் வாகனத்தின் ஓட்டுனர் இருக்கைக்கு பின்னால் குண்டு பாய்ந்தது. நல்ல வேளையாக இருவரும் காயமடையாமல் தப்பிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.