இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது மேற்குகரை பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல வருடங்களாக மோதல் இருந்து வந்துள்ள நிலையில் கடந்த 10-ஆம் தேதி ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா மத வழிபாட்டுத் தளத்தில் மோதல் பயங்கரமாக வெடித்துள்ளது. அதில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் பலத்த காயமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கான பதிலடியை இஸ்ரேல் கொடுத்துள்ளது. இதன் காரணமாக இஸ்ரேலுக்கு எதிராக மேற்குக்கரை பகுதியில் பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மேற்கு கரையின் ஹிப்ரோன் என்ற நகரில் உள்ள எலியஸ் சந்திப்பு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது இஸ்ரேலிய படையினர் மற்றும் அங்கிருந்த இஸ்ரேலிய பொதுமக்களை அங்கு வந்த பாலஸ்தீன பெண் ஒருவர் அதிநவீன எம்-16 ரகத் துப்பாக்கியுடன் குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனால் இஸ்ரேலிய மக்கள் அதிர்ச்சியில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த பாலஸ்தீனத்தின பெண் மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.