குஜராத் தம்பதியினர் குழந்தையாக வளர்த்த பூனை ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் காணாமல்போனதால்,20 நாட்கள் தேடி அலைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஜியாஸ் பாய் – மீனா தம்பதியினருக்கு திருமணமாகி 17 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என்பதால் ஒரு பூனை ஒன்றை தத்தெடுத்து அதற்கு பாபு என்று பெயர் வைத்து ஆசையாக மகன் போல் வளர்த்து வந்தனர். எங்கு சென்றாலும் மகன் பூனையுடனே செல்வார்கள். இந்த நிலையில் இந்த தம்பதியினர் கடந்த மே 9-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு பாபுவுடன் வந்துள்ளனர்.
சாமி தரிசனம் செய்துவிட்டு 13-ம் தேதியன்று வீடு திரும்புவதற்காக ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது பாபு காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அங்கு சுற்றியுள்ள பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பாபுவுடன் எடுத்த புகைப்படத்தை பார்ப்பவர்களிடம் காட்டி தேட ஆரம்பித்தனர்.
எங்கு தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்து விட்டு 20 நாட்களாக அப்பகுதியில் சுற்றி தேடி அலைந்துள்ளனர். இதற்கிடையே அவர்களிடம் பாபுவை கண்டு பிடித்து தருவதாக சிலர் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளனர். தெரு தெருவாக தேடி அலைந்த தம்பதியினரை டாக்சி டிரைவர்கள் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தி நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை குஜராத் ரயிலில் அனுப்பி வைத்தனர். குழந்தையாக வளர்த்து வந்த அந்த தமபதியினர் வருத்தத்துடன் சென்றனர்.