வியட்நாமில் இரண்டு சகோதரர்கள் ஒருவர் மீது மற்றொருவர் தலைகீழாக நின்றுகொண்டு நூறு படிகளை கடந்து உலக சாதனை படைத்துள்ளனர்.
வியட்நாம் நாட்டில் வசிக்கும், ஜியாங் குவோக் கோ மற்றும் ஜியாங் குவோக் ஜிகய்ப் ஆகிய இரு சகோதரர்களுக்கும், சிறுவயதிலிருந்தே சாகச விளையாட்டுகளில் தீவிர ஆர்வம் இருந்திருக்கிறது. எனவே பலவகையான சாகசங்களை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
அதன்படி, கீழே ஒருவர் நின்றுகொண்டு, அவரின் தலையில் மற்றொரு சகோதரர் தன்னை சமநிலையாக தலைகீழாக நிறுத்திக்கொண்டார். அதன்பின்பு கீழே இருக்கும் சகோதரர், தன் சகோதரரை சரியாக தன் தலையில் தாங்கிக் கொண்டு சுமார் 53 நொடிகளில், 100 படிக்கட்டுகளில் ஏறி சாதனை படைத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, “நாங்கள் இருவரும் இந்த சாதனைக்காக சுமார் 15 வருடங்களாக பயிற்சி மேற்கொண்டோம். நாங்கள் கடினமாக பயிற்சிகளை மேற்கொண்டபோது, பல விபத்துகள் ஏற்பட்டது. அதில், காயங்களும் அடைந்திருக்கிறோம். ஆனால், அவை அனைத்தையும் கடந்து இன்று மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
கடைசியாக, 53 படிகளை கடந்து விட்டோம். 5 வருடங்களுக்கு முன் நாங்கள் இதேபோன்று 52 நொடிகளில் 90 படிகளை கடந்தோம். தற்போது, 100 படிகளாக அதனை மாற்றி இருக்கிறோம் என்று இருவரும் கூறியிருக்கிறார்கள்.