கிரேட்டா தன்பர்க் நமது காலத்துக்கான தலைவர் என்றும்; அவரது பேச்சு பருவ நிலை மாற்றம் குறித்து நாம் உணர இறுதி அழைப்பு என்றும் பிரபல ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பருவ நிலை செயல்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க்கை சமீபத்தில் சந்தித்து உரையாடியுள்ளார். கிரேட்டா தன்பெர்க்குடன் எடுத்த புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், “மனித வரலாற்றில் முக்கியத் தருணங்களில் மாற்றத்துக்குத் தேவையான குரல்கள் எழும். ஆனால், கிரேட்டா தன்பெர்க் நம் காலத்தின் தலைவராக உருவெடுத்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், “வரும் தலைமுறையினர் இந்த உலகை அனுபவிக்க நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை வைத்துத்தான் வரலாறு நம்மை யார் என்று தீர்மானிக்கும். கிரெட்டாவுடன் நேரத்தைச் செலவிட்டது, எனக்குக் கிடைத்த கௌரவம்” என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி பருவ நிலை மாற்றம் குறித்த அபாயங்களை நாம் உணர கிரேட்டா தன்பெர்கின் அழைப்பே இறுதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லியனார்டோ டிகாப்ரியோ 2016ஆம் ஆண்டு The Revenant என்ற திரைப்படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்றவர். மேலும், பருவ நிலை மாற்றம் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பிவரும் முக்கிய நபர்களில் இவரும் ஒருவர். மே மாதம் சென்னையில் ஏற்பட்ட கடும் தண்ணீர் பஞ்சம் குறித்தும், இவர் ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/B4VL7ZnFrjf/?utm_source=ig_web_copy_link