கொரோனா தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்கொண்டு வந்துள்ளார். இதனை தொடந்து பேசிய துணை தலைவர் துரைமுருகன், நாட்டையே புரட்டி போட்டுவிட்டது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் காரணமாக டாஸ்மாக் சட்டமன்றத்தை தவிர கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டு விட்டது.
இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூலி வேலையாட்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறு வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் இருந்து 6 மாதங்கள் விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஜிஎஸ்டி கவுன்சிலிடம் சிறு வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் இருந்து 6 மாதங்கள் விலக்கு அளிப்பது தொடர்பாக அரசு சார்பாக அழுத்தம் கொடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் திமுக எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் வாலியுறுத்தியுள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அமைச்சர் வீரமணி, கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பல்வேறு சலுகைகளை அளித்துள்ளன. தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக தமிழகம் உள்ளது. சிறு வணிகங்கள் இயல்பாக செயல்படுகிறது. சிறு வணிகத்திற்கு பாதிப்பில்லை என தெரிவித்த அவர், வரி விலக்கு தொடர்பாக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தான் முடிவெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.