கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள மல்லபுரம் பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிற்சி கூடம், கண்காணிப்பு மையம், அறிவியல் ஆய்வு மையம் போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு கட்டிடத்தின் திறப்பு விழாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை கலந்து கொண்டு திறந்து வைத்தார். அதன் பின் முதல்வர் பசுவராஜ் பொம்மை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, அரசு பள்ளியில் அமைந்துள்ள ஆய்வு மையத்திற்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளதால் அவருடைய புகழை மாணவ-மாணவிகள் விண்ணுக்கு எடுத்து செல்வார்கள்.
இந்த அரசு பள்ளியில் இருக்கும் நவீன மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் மாநிலம் முழுவதும் இருக்கும் அனைத்து அரசு பள்ளிகளிலும் கொண்டு வரப்படும். அரசு பள்ளிகளில் கட்டிடத்தை கட்டி பணத்தை வீணாக்குவதை விட டிஜிட்டல் மையம் ஆக்குவதில் கவனம் செலுத்துவது நல்லது. இதற்காக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் முன் வர வேண்டும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் இருக்கும் திறமையை ஆசிரியர்கள் கண்டுபிடித்து அதை வெளிக்கொண்டு வரவேண்டும். மேலும் மாணவர்களின் அறிவாற்றல் அதிகரிப்பதற்கு மாநில மொழி மற்றும் கணிதம், அறிவியல் பாடங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறினார்.