வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பொதுமக்கள் வாங்கிய கடனை எல்லாம் தள்ளுபடி செய்து விட்டால் அரசாங்கம் எப்படி இயங்கும். மாற்றுத்திறனாளிகள் கடன், பயிர் கடன், கால்நடைகள் கடன் என ஒவ்வொரு கடனையும் அரசாங்கத்தால் எப்படி தள்ளுபடி செய்ய முடியும்.
ஒரு அரசாங்கம் சரியாக நடைபெற வேண்டும் என்றால் அதற்கு வாங்கிய கடனை அனைவரும் திருப்பி செலுத்த வேண்டும். ஒருவேளை கடனை தள்ளுபடி செய்து விட்டால் எல்லோருக்குமே கடனை தள்ளுபடி செய்து விடுவார்கள் என்ற எண்ணம் வந்துவிடும். எனவே ஒவ்வொருவருக்கும் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணம் வர வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது தமிழக ஆளுநர் அவர்கள் தவறுகள் நடந்தால் கேட்பதற்கு எங்களுக்கு அதிகாரம் உண்டு என்று கூறியது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் அவர் பாவம் எதையாவது அவர் பாட்டுக்கு சொல்லிக் கொண்டே இருப்பார் என்று கூறினார். மேலும் தமிழகத்தில் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை உப்பு சப்பில்லாதது என்றும் கூறினார்.