லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தைலாபுரம் பகுதியில் உத்தரகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரகுமார் 4 ஏக்கர் நிலத்தை தனது பெயரில் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த நிலத்தை தனது தந்தையான ஏழுமலையின் பெயரில் பட்டா மாற்றம் செய்ய உத்திரகுமார் முடிவெடுத்தார். இதற்காக தைலாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு உத்தரகுமார் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் கிராம நிர்வாக அலுவலரான ராஜூ என்பவர் இருந்துள்ளார். அவர் வேலை நடக்க வேண்டும் என்றால் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என உத்திரகுமாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் உத்தரகுமார் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணத்தை ராஜூவிற்கு உத்திரகுமார் அளித்துள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ராஜூவை கையும் களவுமாக பிடித்து விட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜூவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.