கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சைக்கு ஒரு கடிதத்தை எழுதி அதில் பெண்களுக்கு ஏற்படும் அவலங்களையும் துன்பங்களையும் குறிப்பிட்டு அதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கூகுள் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்றிய எமி நியபெல்ட் என்பவர் THE NEWYORK TIMES பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது “கூகுள் அலுவலகத்தில் பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் குறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் பெண்களுக்கு தொல்லை கொடுத்தவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததோடு அவருடனேயே இணைந்து பணியாற்ற வேண்டும் என வற்புறுத்திடுகின்றனர். ஒரு கட்டத்தில் அவர்களுடைய தொல்லை தாங்காமல் நான் வேலையை விட்டு சென்றேன். இது போன்று பல பெண் ஊழியர்களுக்கு நடந்திருப்பது அதன் பிறகுதான் தனக்கு தெரிய வந்துள்ளது” என அவர் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து கூகுள் நிறுவனத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் பெண்களுக்கு எப்படியெல்லாம் தொந்தரவு கொடுக்கிறார்கள் எனவும் தொந்தரவு கொடுத்தவர்களை கூகுள் நிறுவனம் எவ்வாறு பாதுகாக்கிறது எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த கடிதத்தைப் படித்துவிட்டு கூகுள் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஊழியர்களின் புகார்களை புலனாய்வு செய்ய புதிய பாதுகாப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அதில் குறிப்பிட்டிருந்தது.