தமிழக அரசு பள்ளி கல்லூரி , விடுதி மாணவர்களுக்கான உணவுப்படியை உயர்த்தி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சமூக நலன் மற்றும் சத்துணவு துறை சார்பாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ,
41, 133 அங்கன்வாடி மையங்களில் கட்டட பராமரிப்பு பணிகளுக்கு தலா 3,000 ரூபாய் வீதம் மொத்தம் 12 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
10, 888 அங்கன்வாடி மையங்களுக்கு 10 கோடியே 59 லட்சம் செலவில் மேஜை , நாற்காலி, இரும்பு அலமாரி போன்ற தளவாட சாமான்கள் வழங்கப்படும்.
அங்கன்வாடியில் இருக்கும் 3.23 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இரண்டு இணை வண்ணச்சீருடை திட்டத்துக்கு 8 கோடியே 43 லட்சம் ரூபாயில் செலவிடப்படும்.
சட்டம் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி, மதுரை அரசு சட்டக் கல்லூரியின் பழைய கட்டடத்திற்கு பதிலாக, புதிய கட்டடம் கட்டிக் கொடுக்கப்படும்
புதுக்கோட்டை மாவட்டம், “அன்னை சத்தியா அரசினர் குழந்தைகள் காப்பக”த்திற்கு அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடமும், குழந்தைகள் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள பணியாளர்களுக்கு குடியிருப்பும், ரூ.10.23 கோடியில் கட்டப்படும்
மன வளர்ச்சி குறைபாடு, மூளை முடக்குவாதம், தசைச் சிதைவு நோய், பல்வகைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடு உடைய ஆயிரம் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தனியே ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து சிகிச்சை அளிக்கப்படும்.
பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் ரூ.900லிருந்து ரூ.1,000ஆகவும், கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் ரூ.1,000லிருந்து ரூ.1,100ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இழப்பீடு திட்டம்-2020”-க்கான நிதியம், 5 கோடி ரூபாய் வைப்பீட்டுடன் உருவாக்கப்படும் என்று பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
