இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கருக்கு பொன் விழா கொண்டாட எம்சிஏ செய்ய திட்டம் தீட்டியுள்ளது.
மும்பை கிரிக்கெட் சங்கம் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான 50 ஆவது ஆண்டு நிறைவு பொன் விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமாகி கேப்டனாக உயர்ந்தவர் மும்பையை சேர்ந்த சுனில் மனோகர் கவாஸ்கர். 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர். தொடர்ந்து நான்கு உலக கோப்பையில் விளையாடியுள்ளார். வெஸ்ட் இண்டியன்ஸ்க்கு எதிராக 1971 மார்ச் 6ஆம் தேதி நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். வரும் மார்ச் மாதத்துடன் கவாஸ்கர் சர்வதேச போட்டியில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகப்போகிறது. இதனை பொன் விழாவாக கொண்டாட மும்பை கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.
ஆகஸ்ட் 18 ம் தேதி எம்.சி.யின் உயர்நிலை குழு கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்க உள்ளனர். அக்கூட்டத்திற்கு பிறகே பொன்விழா குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக வழக்கம்போல இந்த கூட்டம் ஆன்லைனில் நடைபெறும். 1987 இல் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற கவாஸ்கர் 125 டெஸ்டில் விளையாடி 10,122 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 108 ஒருநாள் போட்டிகளில் 3,098 ரன் எடுத்துள்ளார். டெஸ்ட்,ஒருநாள் போட்டிகளில் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். ராஞ்சி உள்ளிட்ட முதல்தர போட்டிகளில் 25,834 ரன்னும்,லிஸ்ட் ஏ போட்டிகளில் 4,594 ரன் குவித்ததுடன் முதல்தர போட்டியில் அதிகபட்சமாக 340 ரன்கள் விளாசியுள்ளார்.