எட்டு மாதங்களுக்கு முன்பு ரயிலில் தங்கக்கட்டிகளை தவற விட்ட நபர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் வோரல்பென் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிலோ கணக்கில் அடையாளம் தெரியாத நபர் தங்க கட்டிகளை விட்டுச் சென்ற நிலையில் எட்டு மாதங்களுக்குப் பிறகு அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி லூசர்ன் வந்தடைந்த வோரல்பென் எக்ஸ்பிரஸ் ரயிலில் தங்க கட்டிகள் கேட்பாரற்று கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதன் மொத்த மதிப்பு 1,43,61,512 ரூபாய் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தங்ககட்டிகளின் உரிமையாளரை தேடும் பணியை லூசர்ன் மண்டல நிர்வாகம் தீவிரப்படுத்தியது. கடந்த 8 மாதங்களாக அந்த மர்ம நபர் குறித்த தகவல்கள் ஏதும் இன்றி இருந்த நிலையில் ஜெர்மன் நாட்டின் இணைய செய்தி பக்கத்தில் தங்க கட்டிகள் தொடர்பான செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. அந்த செய்தியில் தங்கக்கட்டிகள் கானா நாட்டில் இயங்கிவரும் சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், அந்த நிறுவனத்தின் ஊழியர் லூசர்ன் நகரத்திற்கு சென்றபோது தவற விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் அந்த நிறுவனம் தங்கத்தை தவறவிட்டதை ஏற்க மறுத்ததுடன் ஊழியர் தான் தங்கத்தை திருடியதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. தவறவிடப்பட்ட தங்க கட்டிகள் ஜெனிவாவில் இயங்கிவரும் நகைக்கடைக்காரரிடம் அளிக்கப்பட வேண்டியது என்றும் அந்த செய்தியில் குறிப்பிட்டது. ஆனால் லூசர்ன் மண்டல நிர்வாகத்திடம் இதுவரை தங்க கட்டிகள் குறித்து யாரும் உரிமை கோரவில்லை என்பது தெரியவந்துள்ளது.