செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சட்டமன்றத்தில் நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். சட்டமன்றத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தி பேசி இருக்கிறேன். அதுபோன்று வன்னியர்களுக்கு இயற்றப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த ஜாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சமூக நீதி வழங்குவதற்கு காலதாமதம் ஆகும் என்று சொன்னால், உடனடியாக 10.5 சதவீதத்தை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது போல், இனி சட்டத்தை தள்ளுபடி செய்யாத வண்ணம் உரிய ஆவணங்களோடு சட்டம் ஏற்றுங்கள் என்ற கோரிக்கையும் சட்டமன்றத்தில் வைத்திருக்கின்றேன்.
இந்த இரண்டு கோரிக்கைகளும் கோரிக்கைகளாக இருக்கிறது. அதனால் தான் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு அழுத்தத்தை தரும் வகையில், சாதி மதங்களை கடந்து , சமூகநீதியை அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்கின்ற சமூகநீதி கோட்பாடு தத்துவத்தின் அடிப்படையில் கோட்டையை நோக்கி மாபெரும் கோரிக்கை பேரணியை எதிர்வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கின்ற போது நாங்கள் நடத்துகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.