நாமக்கல் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களிடம் பணித்தள பொறுப்பாளர் பணம் கேட்டதால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஓலப்பாளையம் ஊராட்சியில் உள்ள எல்லைமேடு, மங்கலமேடு, இந்திராநகர், கூடுதுறை, கட்டமராபாளையம்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் திசையை ஊரக 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது பணித்தள பொறுப்பாளராக வேலைபார்த்து வரும் கோகிலா என்பவர் அங்கு வந்த தொழிலாளர்களிடம் 100 ரூபாய் கேட்டுள்ளார்.
இதனையடுத்து தொழிலாளர்கள் பணம் தர மறுத்துள்ளனர். அதற்கு அவர் பணம் கொடுக்காவிட்டால் வேலைக்கு வந்ததாக கணக்கு கட்டமாட்டேன் என்று மிரட்டியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சிடைந்த தொழிலாளர்கள் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன், இன்ஸ்பெக்டர் முருகேசன், மோகனூர் வட்டார வளர்ச்சி துறை அலுவலர் தேன்மொழி ஆகியோர் தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்னரே அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சற்று நேரம் பாதிப்படைந்தது.