காதலன் சரிவர பேசாததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கத்தில் பவித்ரா என்பவர் வசித்துவருகிறார். இவர் போரூரில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக பணிபுரிந்தார்.இவரும் ஐயப்பன்தாங்கல் என்ற பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் மோகன் பதட்டத்துடன் பவித்ராவின் வீட்டிற்கு வந்து கதவை தட்டியும், கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த மோகன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பவித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அவரை உடனடியாக மீட்டு அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் பவித்ரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் முத்து ராமலிங்கம் மற்றும் போலீசார் பவித்ராவின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மோகன் மற்றும் பவித்ரா ஆகிய இருவரும் துணிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆன்லைனில் உணவு வினியோகம் செய்யும் வேலையில் மோகன் ஈடுபட்டதால், பவித்ராவிடம் கடந்த சில தினங்களாக அவரால் செல்போனில் சரிவர பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் பின் பவித்ரா மோகனிடம் தன்னை வெளியே அழைத்து செல்லுமாறு கேட்டதற்கு, மோகன் தனக்கு அதிக வேலை இருப்பதால் அழைத்து செல்ல முடியாது என கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த பவித்ரா தான் தற்கொலை செய்யப் போவதாக கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். அதன்பிறகு பவித்ராவின் செல்போனிற்கு பலமுறை தொடர்பு கொண்டும் பவித்ரா அதை எடுக்காததால், மோகன் பயந்து அவரது வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போதுதான் பவித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.