தமிழகத்தின் 2-வது பெரிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் சுமார் 13 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு 4970 ஏக்கரில் அமைக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு அதிகமாக பணம் கொடுக்கப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகள் போன்றவைகள் பாதிக்கப்படும் என்பதால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இருப்பினும் அரசாங்கம் விமான நிலையத்தை அமைப்பதில் உறுதியாக இருக்கிறது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பரந்தூர் விமான நிலையத்தின் முழு பொறுப்பும் தமிழக அரசிடமே இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. அதாவது விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, இழப்பீடு நிதி ஒதுக்கீடு போன்றவைகள் மாநில அரசின் வசம் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்று பொதுமக்கள் போராடிவரும் நிலையில் மத்திய அரசு இப்படி ஒரு தகவலை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.