கொரோனவை கட்டுப்படுத்த நாளை ஒரு நாள் மட்டும் கடலூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கூறியுள்ளனர்.
ஊரடங்கு அமலில் இருக்கும் வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் மொத்தம் 1,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அரியலூரில் புதியதாக 19 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது.
இவர்கள் சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூர் திரும்பியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அரியலூரில் தற்போது மொத்த பாதிப்பு 27 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. திருவாரூரில் நாளை ஊரடங்கு கடைபிடிக்க உள்ளதால் வீட்டைவிட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
ஊரடங்கில் மருத்துவ பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல கடலூர் மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.