வாழ்வில் விரக்தியடைந்த கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள சின்னநாகாச்சி கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் கடந்த 8 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால் கணேசன் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாழ்வில் விரக்தியடைந்த கணேசன் கடந்த 16ம் தேதி வீட்டில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கணேசன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சத்திரக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.